குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 09 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பினை வெளியிட்டது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்பதோடு மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகவும் அறிவிக்கப்படும்.
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி ஆகஸ்ட் 22 ஆகவும் மற்றும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும்.
வாக்குப்பதிவு ஆனது அறை எண். F-101, வாசுதா, முதல் மாடி, பாராளுமன்றம், புது டெல்லி என்ற முகவரியில் நடைபெறும்.
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
தேர்தல் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 மாநிலங்களவை உறுப்பினர்கள் (தற்போது ஐந்து இடங்கள் காலியாக உள்ளன), 12 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் (1 இடம் காலியாக உள்ளது) உள்ளனர்.
தேர்தல் குழுவில் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர், அதில் 782 உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.
அனைத்து வாக்காளர்களும் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களாக இருப்பதால், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் வாக்கும் ஒரே மாதிரியான மதிப்பு கொண்டதாக இருக்கும்.
ஒற்றை மாற்று வாக்கு மூலமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு ஏற்ப வாக்குப் பதிவுகள் நடைபெறும்.
இந்த முறையில், வாக்காளர் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக தங்களது விருப்பத் தேர்வுகளைக் குறிக்க வேண்டும்.
விருப்பத்தேர்வை சர்வதேச அளவில் உள்ள இந்திய எண்கள், ரோமன் வடிவத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு இந்திய மொழிகளின் வடிவத்திலும் குறிக்கலாம்.
விருப்பத் தேர்வை எண்களில் மட்டுமே குறிக்க வேண்டும், சொற்களில் குறிப்பிடக் கூடாது.
வாக்காளர் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் போலவே அவர்களின் பல விருப்பத் தேர்வுகளையும் குறிக்கலாம்.
தனது வாக்கைக் குறிக்க, ஆணையம் குறிப்பிட்ட பேனாக்களை வழங்கும்.
வேறு எந்தப் பேனாவையும் பயன்படுத்தி வாக்களிப்பது வாக்கு எண்ணும் நேரத்தில் அந்த வாக்கினைச் செல்லாததாக்க வழி வகுக்கும்.
ஒரு வேட்பாளரின் வேட்புமனுவில் குறைந்தபட்சம் 20 வாக்காளர்கள் முன்மொழிபவர்களாகவும், குறைந்தது 20 வாக்காளர்கள் வழிமொழிபவர்களாகவும் கையெழுத்திட வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.