2023 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற்ற பல மாநிலங்களின் காட்சி வாகனத்தில் 'நாரி சக்தி' என்ற கருத்துருவே அதிகம் இடம் பெற்றிருந்தது.
96 வயதில் எழுத்தறிவுத் தேர்வில் முதலிடம் பெற்ற, 2020 ஆம் ஆண்டு நாரி சக்தி புரஸ்கார் விருதை வென்ற கார்த்தியாயனி அம்மாவினைச் சித்தரிக்கும் வகையில் கேரள மாநிலத்தின் காட்சி வாகனம் இடம் பெற்றிருந்தது.
நாட்டிலேயே பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளதோடு அந்த மாநிலம் குடும்பஸ்ரீ எனப்படும் உலகின் மிகப்பெரிய மகளிர் சுய உதவிக் குழு வலையமைப்பினையும் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தின் காட்சி வாகனமானது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மாநிலத்தின் கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் வகையில் இருந்தது.
இந்தக் காட்சி வாகனத்தின், முன் பகுதியில் அறிவுசார் பெண்களுக்கான சின்னமாக விளங்கும் கவிஞர் ஒளவையார் அவர்களின் சிலை காட்சிப் படுத்தப்பட்டது.
அந்த வாகனத்தின் முன்பக்கத்தின் இருபுறமும் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் குதிரை மீது ஏறி நிற்கும் சிலை வைக்கப் பட்டிருந்தது.
இவர் சிவகங்கையின் இராணி (1780-90) ஆவார்.
இந்தக் காட்சி வாகனத்தின், நடுப்பகுதியில் புகழ்பெற்ற பெண் ஆளுமைகளின் சிலைகள் காட்சிக்கு வைக்கப் பட்டன.
கர்நாடக இசைப் பாடகி M.S. சுப்புலட்சுமி, சிறந்த பரதநாட்டிய மேதை தஞ்சை பால சரஸ்வதி ஆகியோரின் சிலைகள் இதில் இடம் பெற்றன.
சமூகச் சீர்திருத்தவாதியும் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடைய சிலையும் இடம் பெற்றது.
திராவிட இயக்கத்தின் ஆசிரியரும் அரசியல் ஆர்வலருமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் சிலையும் இடம் பெற்றிருந்தது.
தனது 105 வயதிலும் விவசாயத் துறையில் தீவிரமாகப் பணியாற்றி வரும் பிரபலமான இயற்கை விவசாயி பாப்பம்மாள் அவர்களின் சிலையும் இதில் இடம் பெற்றது.