2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்திய நாடாளுமன்றமானது சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்ளை நோய்கள் (திருத்தம்) மசோதா, 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று மாநிலங்களவையினால் நிறைவேற்றப் பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
இந்த மசோதாவானது கொள்ளை நோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இது போன்ற நோய்களின் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசின் அதிகாரங்களை விரிவு செய்வதற்காகவும் கொள்ளை நோய்கள் சட்டம், 1897 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தொற்று நோய்கள் (திருத்தம்) அவசரச் சட்டத்தை நீக்குகின்றது.
இந்தச் சட்டமானது சுகாதார நலப் பணியாளர்களின் வாழ்விற்கு இழப்பு ஏற்படுத்துதல், தீங்கு விளைவித்தல், அபாயகரமான முறையில் நடந்து கொள்தல், புண்படுத்துதல் ஆகியவற்றை நடவடிக்கை எடுக்கத் தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாததான ஒரு குற்றமாக ஆக்குகின்றது.
மேலும் இந்த மசோதாவானது 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையையும் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரையிலான அபராதம் விதிக்கப் படுவதற்கான அம்சத்தையும் கொண்டுள்ளது.