இந்தத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் என்பவர் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்து எழுதி உள்ளார்.
அமைச்சர் டி.ஷியாம்குமார் என்பவரைத் தகுதி நீக்கம் செய்ததற்காக மணிப்பூர் சட்டமன்றச் சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கெய்ஷாம் மேகச்சந்திர சிங் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பானது வெளி வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஷியாம்குமார், பின்னர் என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவாக அந்தக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இவரது தகுதிநீக்க மனுவின் மீது நான்கு வாரங்களில் முடிவு செய்யுமாறு அம்மாநிலச் சட்டமன்ற சபாநாயகரை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பரிந்துரைகள்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் (Anti-Defection Law - ADL) கீழ் முடிவெடுக்கும் அதிகாரியாக இருக்கும் சபாநாயகரின் நிலை குறித்து உச்ச நீதிமன்றம் சில முடிவுகளை எடுத்துள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக சட்டமன்ற சபாநாகர்களால் பயன்படுத்தப்படும் பிரத்தியேக அதிகாரத்தை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் வரும் தகுதிநீக்க மனுக்களைப் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் ஆகியவற்றின் வரம்புகளுக்கு வெளியே ஒரு நெறிமுறையால் தீர்க்கப்பட வேண்டும்.
பணம் மற்றும் அதிகாரத்திற்காக கட்சி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் நிலையைத் தீர்மானிப்பதற்காக ஒரு சுயாதீன தீர்ப்பாயத்தை நியமிக்க வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு நிரந்தரத் தீர்ப்பாயத்தை அமைக்க இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராகவும் சபையின் உறுப்பினராகவும் இருக்கும் ஒரு சபாநாயகர் ஏன் ஒரு அரசியல் கட்சிக்குத் தாவுதல் தொடர்பான தகுதி நீக்கத்தில் "ஒரே மற்றும் இறுதி நடுவராக" இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபாநாயகர்கள் பத்தாவது அட்டவணையின் கீழ் வரும் தகுதி நீக்க மனுக்களின் மீது "குறிப்பிட்ட காலத்திற்குள்" முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றமானது உச்சபட்ச கால வரம்பை நிர்ணயித்துள்ளது.
பின்னணி
கிஹோட்டோ ஹோலோஹன் (1992) என்ற ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்ச நீதிமன்றம் ADLன் செல்லுபடித் தன்மையை உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பானது சபாநாயகரின் உத்தரவை சில வரையறைகளுக்கு உட்படுத்தும் வகையில் நீதித்துறையின் மறுஆய்விற்கு உட்படுத்தியது.
அதில், சபாநாயகர் ஒரு உத்தரவை பிறப்பிக்காவிட்டால் நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது நடைமுறைக்கு வராது என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
கட்சித் தாவல் குறித்து சபாநாயகர் முடிவெடுப்பதற்கு முன்னர் அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு இது இடமளிக்கவில்லை.
இது தொடர்பாக 2016 ஆம் ஆண்டில், எஸ்.ஏ.சம்பத்குமார் எதிர் காலே யாதையா வழக்கு என்று பெயரிடப்பட்ட மற்றொரு வழக்கும் இருந்துள்ளது.