தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நூலகமானது, தற்போது 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலக விதிகளின் கீழ் உதவி பெறும் நூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அரண்மனை நூலகத்தின் நூல் இருப்புகள்/சேகரிப்புகளின் தொடக்கமானது, பதினாறாம் நூற்றாண்டில் பொது சகாப்தம் (கி.பி) 1535 ஆம் ஆண்டு முதல் 1675 ஆம் ஆண்டு வரையிலான தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களின் கீழ் தொடங்கப் பட்டதாக நம்பப்படுகிறது.
மராட்டிய ஆட்சியாளர்கள் பின்னர் கி.பி 1798 ஆம் ஆண்டு முதல் 1832 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த இரண்டாம் இராஜா சரபோஜியின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுடன் அந்த நூல் இருப்பினை விரிவுபடுத்தினர்.
இரண்டாம் இராஜா சரபோஜி, அந்த நூலகத்திற்காக பல புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை வாங்கிய பிரபல புத்தகப் பிரியர் ஆக அறியப்படுகிறார்.
இந்த நூலகமானது, வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சாவூர் அரண்மனைக்குள் அமைந்து உள்ளது.
இது எண்பத்தி ஒராயிரத்து நானூறுக்கும் மேற்பட்டப் புத்தகங்களையும் நாற்பத்தேழாயிரத்து ஐநூறு பனை ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் /கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டுள்ளது.
இராஜாவின் தனிப்பட்ட புத்தகச் சேகரிப்பில் நான்காயிரத்து ஐநூற்று முப்பது புத்தகங்கள் உள்ளன.
கையெழுத்துப் பிரதிகள் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ளன.
பனை ஓலைகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களில் கிரந்தம், தேவநாகரி, நந்தி நாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகியவை அடங்கும்.
தமிழ் மொழித் தொகுப்பில் சைவ, வைணவ மற்றும் சமண சமயப் படைப்புகள், அரிய மருத்துவ நூல்கள் ஆகியவை அடங்கும்.
சரஸ்வதி மஹால் நூலகம் என்பது உலகின் மிகப்பெரிய கிழக்கத்திய/ஓரியண்டல் கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.