சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்
February 11 , 2019 2372 days 869 0
இந்தியாவில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் (International Labour Organisation - ILO) நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நொய்டாவில் உள்ள V.V கிரி தேசிய தொழிலாளர் பயிற்சி நிறுவனத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரால் துவக்கி வைக்கப்பட்டது.
ஆரம்பகால உறுப்பினராக இந்தியா இந்நிறுவனத்தின் ஒவ்வொரு துறையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது.
கடந்த நூற்றாண்டில் அனைத்து எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் உள்பட 189 சர்வதேச தொழிலாளர் நிறுவன ஒப்பந்தங்களில் 47 ஒப்பந்தங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்திருக்கின்றது.
சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் அளிக்கவும் சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங்களை ஏற்படுத்தவும் இயங்கிடும் சர்வதேச தொழிலாளர் நிறுவனமானது ஒரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளில் 193ல் 186 நாடுகளோடு குக் தீவுகளையும் சேர்த்து மொத்தம் 187 நாடுகளை தனது உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது.
அரசு, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகியோர் வெளிப்படையாக விவாதித்து தொழிலாளர் தரநிர்ணயங்களை உருவாக்கிடும் வகையில் இந்நிறுவனத்தின் முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைப்பானது ஒரு புதுமையான அம்சமாகும்.