மாநில வாரியான தரவுகளின்படி, அதிக எண்ணிக்கையிலான சிறார்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் பதிவான மொத்தம் 11,890 விபத்துகளில் 2,063 விபத்துகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன.
இந்தத் தரவு ஆனது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சாலை விபத்துத் தரவுத்தள (iRAD) அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
அதே தரவுகளின் படி மத்தியப் பிரதேசத்தில் 1,138 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 1,067 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு காவல்துறையானது, iRAD அமைப்பைப் பயன்படுத்தி இந்தக் கூற்றுகளைச் சரி பார்க்கும் போது, 2023 ஆம் ஆண்டில் 204 விபத்துக்களும், 2024 ஆம் ஆண்டில் 269 விபத்துக்களும் உட்பட 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாநிலத்தில் சிறார்களால் ஏற்பட்ட விபத்துகள் 473 மட்டுமே எனக் கண்டறிந்தது.
தமிழ்நாட்டில் சிறார் குற்றவாளிகளின் பாதுகாவலர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப் பட்ட சலான்களின் (கட்டண ரசீதுகளின்) எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 41 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 80 ஆகவும் இருந்தது.
பீகாரில் சிறார்களுக்கு வழங்கப்பட்ட சலான்கள் அதிகபட்ச எண்ணிக்கையில் 1,316 ஆக பதிவாகியுள்ளன என்பதோடு இது 44.27 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியது.
தமிழ்நாட்டில் விபத்து மற்றும் குற்றத் தரவுகள் ஆனது குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகளின் (CCTNS) ஒரு பகுதியாக உள்ள மாநிலக் குற்றப் பதிவு வாரியம் (SCRB) மூலம் iRAD தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.
தமிழ்நாடு விபத்துத் தரவை iRAD தளத்தில் பதிவேற்றுவதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைப் பேணி வருகிறது, ஆனால் பிற மாநிலங்களின் இத்தரவுத் தரத்தை அதனால் சரிபார்க்க இயலவில்லை.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாநிலத்தில் பதிவான சாலை விபத்துகளில் 17 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது.
இந்த காலக் கட்டத்தில் 2,576 விபத்துகளும், 2,678 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இது 2024 ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 3,110 விபத்துகளும், 3,253 உயிரிழப்புகளும் ஏற்பட்டன.