தற்பொழுது சியாச்சின் பகுதியானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாவிற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் இவர் கிழக்கு லடாக்கில் உள்ள ஷியோக் ஆற்றின் மீது அமைந்த உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாலத்தையும் திறந்து வைத்தார்.
‘படைத் தளபதி செவாங் ரிஞ்சன் சேது’ என்ற ஒரு பாலமானது லடாக் பிராந்தியத்தின் முன்னணிப் பகுதியில் 14,650 அடி உயரத்தில் எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation - BRO) கட்டப்பட்டுள்ளது.
சியாச்சின் பற்றி
சியாச்சின் பனிப் பாறையானது உலகின் மிக உயர்ந்த போர்க் களமாகும்.
இது இமயமலையின் கிழக்குக் காரகோரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பனிப் பாறையாகும்.
காரகோரம் சில சமயங்களில் "மூன்றாவது துருவம்" என்று அழைக்கப்படுகின்றது.
இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு முடிவடையும் பகுதியான NJ9842ன் வடகிழக்கில் உள்ளது.
2004 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார்.
2005 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங் இப்பகுதிக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பிரதமராக உருவெடுத்துள்ளார்.
அதன் பின்னர் தற்போதைய இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும் இந்தப் பகுதிக்கு 2014 ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்டார்.
இந்திய இராணுவம் 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சியாச்சினுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதித்தது. இந்த சியாச்சின் பயணங்கள் 1984 ஆம் ஆண்டில் மொத்தமாக நிறுத்தப்படும் வரை தொடர்ந்தது.
1984 ஆம் ஆண்டில், ஒரு இராணுவ நடவடிக்கையான “மேக்தூத் நடவடிக்கையை” இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையானது சியாச்சின் பனிப்பாறை முழுவதையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.