அசாமி, பெங்காலி, மராத்தி, பாலி மற்றும் பிராகிருதம் ஆகிய செம்மொழிகளுக்கான ஐந்து சிறப்பு மையங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையங்கள் மொழியியல் மற்றும் இலக்கிய மரபுகளின் மேம்பட்ட ஆராய்ச்சி, பாதுகாப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும்.
செம்மொழிகளான அசாமி மொழிக்கான மையம் அசாமின் தேஜ்பூர் பல்கலைக் கழகத்திலும், பெங்காலி மொழிக்கான மையம் மேற்கு வங்கத்தின் விஸ்வ-பாரதி பல்கலைக் கழகத்திலும், மராத்தி மொழிக்கான மையம் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியிலும் அமைக்கப்படும்.
செம்மொழிகளான பாலி மொழிக்கான மையம் ஒடிசா மத்திய பல்கலைக் கழகத்திலும், பிராகிருத மொழிக்கான மையம் குஜராத் மத்திய பல்கலைக் கழகத்திலும் அமைக்கப்படும்.
இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மொழி 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான பதிவு செய்யப்பட்ட வரலாறு, வளமான பழங்கால இலக்கியங்கள், அசல் இலக்கிய மரபு மற்றும் அதன் பிந்தைய அல்லது நவீன வடிவங்களிலிருந்து வேறுபட்ட செம்மொழி வடிவத்தைக் கொண்டு இருந்தால் அது செம்மொழியாக அங்கீகரிக்கப்படுகிறது.