தமிழ்த் தாய் வாழ்த்து குறித்த மத்திய அரசின் கருத்து
August 14 , 2026 39 days 112 0
அரசாங்க நிகழ்வுகளின் போது, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை பாடப் பட்ட பிறகு, தமிழ்த் தாய் வாழ்த்து என்ற அரசுப் பாடலை கடைசியாகத்தான் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வலியுறுத்தவில்லை.
கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட ஒரு பொதுநல மனுவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வின் முதல் பிரிவு நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று வெளியிட்ட ஒரு அறிவிக்கையை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிக்கைக்குப் பதிலாக 2026 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று ஒரு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டதால், இந்த வழக்கு பயனற்றதாகிவிட்டது.
தேசியப் பாடலையும் தேசிய கீதத்தையும் ஒன்றாகப் பாட வேண்டும் என்றால், அவற்றை எந்த வரிசையில் பாட வேண்டும் என்று கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் கூறினார்.
தேசியப் பாடலையும் தேசிய கீதத்தையும் ஒன்றாகப் பாட வேண்டும் என்றால், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும்.
மாநிலப் பாடலை எந்த வரிசைப்படி பாட வேண்டும் என்பது குறித்து ஒன்றியத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.