2025 ஆம் ஆண்டு திருநர்களுக்கான தமிழ்நாடு மாநிலக் கொள்கை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் ஆகியவற்றைத் திருத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்தக் கொள்கை கூறியது.
திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களுக்கான வாரிசுரிமையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருநர்கள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகக் கருதப் படுவார்கள் என்றும், வீட்டு வசதித் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.
2019 ஆம் ஆண்டு திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் படி, அனைத்துக் கல்வி நிறுவனங்களும் திருநர்களின் கல்விச் சான்றிதழ்களில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதை அரசு உறுதி செய்யும்.
பாலினத்துடன் ஒத்துப் போகாத நபர்களின் சிக்கல்களைத் தீர்க்க சிறார் நீதிச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலினம் தொடர்பான கேள்விகளுக்கு மாநில அரசு 24 மணி நேரமும் செயல்படும் ஒரு உதவி எண்ணை அரசு இயக்கும்.
திருநர்களுக்கான நல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக உள்ளது.
திருநர்கள் நல வாரியத்தை அமைப்பதில் இருந்து அவர்களுக்கு 'திருநங்கை மற்றும் திருநம்பி' என்ற கண்ணியமான பெயரிடலை வழங்குவது வரை இது தொடர்கிறது.
தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் நல வாரியம் ஏப்ரல் 15, 2008 அன்று திமுக அரசாங்கத்தின் கீழ் நிறுவப் பட்டது.
ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கைகள் நல தினமாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
கல்லூரி விண்ணப்பப் படிவங்களில் ஆண் மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலின விருப்பத் தெரிவினை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இங்கு ஒரே குறைபாடு என்னவென்றால், இக்கொள்கையில் திருநர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களின் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய இம்மாநிலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இக்கொள்கை கூறியுள்ளது.
தற்போது, திருநர்களுக்கு மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் (MBC) என்பதின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
ஆனால் கர்நாடக மாநில அரசு அவர்களுக்கென பிரத்தியேகமாக 1% இடஒதுக்கீட்டை வழங்குகிறது.