தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரத்தில் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது (TNSDA) முதல் அகழ்வாராய்ச்சியை நடத்தியது.
இந்த இடமானது தற்போதைய திருமலாபுரம் கிராமத்திலிருந்து வடமேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குலசேகரப் பேரேரி குளத்திற்கு அருகிலுள்ள இரண்டு பருவகால ஓடைகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 35 ஏக்கர் பரப்பில் இந்த புதைவிடப் பகுதி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் இரும்புக் கால கலாச்சாரம் இருந்ததை இந்த அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தின.
இந்தத் தளமானது தற்காலிகமாக கி.மு. மூன்றாம் மில்லினியத்தின் முற்பகுதியில் இருந்து நடுப்பகுதி வரையிலானதாக தேதியிடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை போன்ற பிற இரும்புக் காலத் தளங்களுடன் ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் அகழ்வாராய்ச்சித் தொடரில் மொத்தம் 37 அகழிகள் தோண்டப்பட்டன.
முதுமக்கள் தாழிகளுடன் கூடிய தனித்துவமான செவ்வக வடிவ கல் பலகை அறை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
35 கல் பலகைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த அறையானது 1.5 மீட்டர் வரை கூழாங்கற்களால் நிரப்பப்பட்டது.
கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பாண்டங்கள், சிவப்பு நிறப் பாண்டங்கள், சிவப்பு நிறப் பூச்சு பூசப்பட்ட பாண்டங்கள் மற்றும் கருப்பு நிறப் பூச்சு பூசப்பட்ட பாண்டங்கள் உட்பட பல்வேறு பீங்கான் வகைகள் கண்டெடுக்கப்பட்டன.
சில பீங்கான் வகைகளில் டி. கல்லுப்பட்டி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் காணப்பட்டதைப் போன்ற வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட வடிவமைப்புகள் இருந்தன.
தாழிகளில் உள்ள சின்னங்களில் மனிதன், மலை, மான் மற்றும் ஆமையின் உருவங்கள் இருந்தன.
எலும்பு, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட மொத்தம் 78 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இடுக்கி முள், வாள், ஈட்டி முனை, தங்க மோதிரம், கோடரி, கத்தி, உளி, எலும்பினால் ஆன ஈட்டி முனை மற்றும் அம்பு ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்களில் அடங்கும்.
0.49 மீட்டர் ஆழத்தில் ஒரு தாழிக்குள் மூன்று சிறிய தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப் பட்டன.
ஒவ்வொரு தங்க மோதிரமும் 4.8 மில்லிமீட்டர் விட்டம் கொண்டதாகவும், ஒரு மில்லி கிராமிற்கும் குறைவான எடையுள்ளதாகவும் இருந்தது.
ஆதிச்சநல்லூரின் இரும்புக் காலக் கலாச்சாரப் பண்புகளைப் போன்றே ஆரம்ப கட்டக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.