- 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெளி குற்றங்கள் (அறிவாற்றல் குற்றங்கள்) பதிவு செய்யப் பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்பொழுது (2018) இந்தியாவில் தெளி குற்றங்கள் ஆனது 1.3% அதிகரித்துள்ளது.
- ஆனால் ஒரு லட்சம் மக்களுக்கான குற்றங்கள் என்ற விகிதமானது 2018 ஆம் ஆண்டில் 383.6 ஆகக் குறைந்துள்ளது. இந்தக் குற்ற விகிதமானது 2017 ஆம் ஆண்டில் 388.6 ஆக இருந்தது.
- சுருக்கமாக, 2016 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் குற்ற விகிதமானது குறைந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன.
- தெளி குற்றங்கள் அல்லது வழக்குகள் என்பவை காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ஒருவர், நீதிபதியின் உத்தரவு இல்லாமல் ஒருவரை விசாரித்து, அந்த நபரை நீதிபதியின் பிடியாணையின்றி கைது செய்தல் என்று வரையறுக்கப் படுகின்றது.
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Records Bureau - NCRB) இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நாட்டில் உள்ள சிறப்பு & உள்ளூர் சட்டங்களால் வரையறுக்கப்பட்ட குற்றத் தரவுகளை சேகரித்து, அதைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.
தற்கொலைகள்
- 2018 ஆம் ஆண்டில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 1,34,516 தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
- தினசரிக் கூலித் தொழிலாளர்கள், ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டக் கூடிய ஆனால் இடைநிலைக் கல்வி வரை படித்தவர்கள் ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கையில் அதிக பங்கைக் கொண்டுள்ளனர்.
- அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் மகாராஷ்டிராவில் (17,972) நிகழ்ந்து உள்ளன. இதற்கு அடுத்து தமிழகம் (13,896), மேற்கு வங்கம் (13,255), மத்தியப் பிரதேசம் (11,775), கர்நாடகா (11,561) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- நாட்டின் மக்கள் தொகையில் 16.9 சதவீத பங்குடன் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசமானது தற்கொலை இறப்புகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது குறைந்த சதவீத இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் நாட்டில் நிகழ்ந்த மொத்த தற்கொலைகளில் 3.6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
- அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்றியப் பிரதேசமான தில்லி ஆனது ஒன்றியப் பிரதேசங்களிடையே அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளை (2,526) பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி (500) ஒன்றியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
வேலையின்மை காரணமாக நிகழ்ந்த தற்கொலைகள்
- விபத்து மூலமான இறப்புகள் மற்றும் தற்கொலைகள் குறித்த NCRB தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 12,936 வேலைவாய்ப்பற்ற நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- இது மொத்த தற்கொலைகளில், அதாவது 1,34,516 தற்கொலைகளில் 9.6 சதவீதமாக உள்ளது.
- இவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்களாகவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர்.
- அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திலும் (ஒரு மணி நேரத்திற்கு ஒருவர்) ஒரு வேலைவாய்ப்பற்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக NCRB தரவு தெரிவித்து உள்ளது.
- வேலைவாய்ப்பற்ற நபர்களின் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் விகிதமானது கேரளாவில் 12.3 சதவீதமாகவும் தமிழ்நாட்டில் 12.2 சதவீதமாகவும் மகாராஷ்டிராவில் 9.7 சதவீதமாகவும் கர்நாடகாவில் 8.5 சதவீதமாகவும் உத்தரப் பிரதேசத்தில் 7 சதவீதமாகவும் உள்ளன.
விவசாயிகள் தற்கொலைகள்
- விவசாயத் துறையில் ஈடுபடும் நபர்களின் தற்கொலைகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளன.
- 2018 ஆம் ஆண்டில் 5763 விவசாயிகள்/ குத்தகைதாரர்கள், 4586 விவசாயக் கூலிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
- மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளான விவசாயத் துறையில் தற்கொலை விகிதமானது நாட்டில் மொத்தம் நிகழ்ந்த 134,516 தற்கொலைகளில் 7.7% ஆக உள்ளது.
- அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகளில் மகாராஷ்டிரா மாநிலம் 34.7% சதவிகிதத்துடன் முன்னணியில் உள்ளது. இதற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை விகிதமானது கர்நாடக மாநிலத்தில் 23.2% ஆகவும் தெலுங்கானா மாநிலத்தில் 8.8% ஆகவும் ஆந்திரப் பிரதேசத்தில் 6.4% ஆகவும் மத்தியப் பிரதேசத்தில் 6.3% ஆகவும் உள்ளன.
- நாட்டின் விவசாயத் துறையில் நிகழ்ந்த மொத்தத் தற்கொலைகளில் பாதிக்கும் மேலானவை மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளன.
- மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களிலும் தில்லி உள்ளிட்ட ஒன்றியப் பிரதேசங்களிலும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பதிவு செய்யப் பட்டுள்ளது.
