தேசிய கீதத்திற்கு திரையரங்குகளில் எழுந்து நிற்பது அவசியமில்லை – உச்சநீதிமன்றம்
October 24 , 2017 2818 days 974 0
தேசப் பற்றை நிரூபிக்க, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைத்து மக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“மக்கள் தேசப்பற்றினை உணர்வதற்கு திரையரங்குகளில் நிற்க வேண்டும் என்பது அவசியமும் இல்லை, தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்கள் தேசத்தின் மீது பற்று குறைந்தவர்கள் என்றும் பொருள் இல்லை” என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து ஆகும்.
தேசியக்கொடி நெறிமுறைகளை அரசாங்கம் ஏன் திருத்தியமைக்கவில்லை என்றும், எங்கு தேசிய கீதத்தை இசைக்கலாம் எங்கு இசைக்கக் கூடாது என்பதையும் ஏன் அரசாங்கம் வரையறுக்கவில்லை என்று நீதிபதி சந்திராசூட் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவரன் சிங் குழுவின் பரிந்துரைகளின் படி 1976 ஆம் ஆண்டில், 42-ஆவது சட்டத் திருத்தத்தில் குடிமக்களின் அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டது.
“நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் / குடிமகளும் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துகளையும், நிறுவனங்களையும், தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடியினை மதிக்க வேண்டும்”.
தேசிய கீதத்தை இசைத்துப் பாடுவதும் இந்தியா போன்ற பரந்த தேசத்தின் வேற்றுமைகளில் ஒற்றுமையினை வளர்ப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை கடமைகளை நினைவுகூர்ந்து குறிக்கும் விதமாகவும் இருக்கிறது. அதை மாற்றும் விதமாக உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதற்கு இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.