தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை 2017 - இந்தியாவில் குற்றம்
October 23 , 2019 2096 days 1333 0
2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் குற்றம் (Crime in India) என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 6,986 வழக்குகளுடன் ஒப்பிடும் போது, 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 9,013 ஆக இருந்தது.
இந்த வழக்குகளின் அதிகபட்ச எண்ணிக்கை பின்வரும் மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
ஹரியானா (2,576)
உத்தரப் பிரதேசம் (2,055)
தமிழ்நாடு (1,802)
இந்த அறிக்கை "அரசுக்கு எதிரான குற்றங்கள்" என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அதன் எண்ணிக்கை 30 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் வகுப்புவாதக் கலவரங்களின் எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் 869 ஆக இருந்து 2017 ஆம் ஆண்டில் 723 ஆக குறைந்து விட்டது என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இந்தக் கலவரத்தால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெறுக்கத்தக்க குற்றங்களில் 43% பங்கைக் கொண்டு, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது.
மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பத்திரிகையாளர், இடித்துரைப்பாளர், சமூக சேவையாளர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் NCRBயில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவை தெளிவற்ற / நம்ப முடியாத தரவுகளைக் கொண்டுள்ளன.
குற்றங்களின் புதிய வகை – இணைய வழிக் குற்றங்கள், பெண்களின் பாதுகாப்பு
இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட NCRB அறிக்கையில், பணியிடத்தில்/பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 88 புதிய வகை குற்றங்கள் அடங்கியுள்ளன.
"ஜிகாதி பயங்கரவாதிகள், இடதுசாரித் தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள்" ஆகியோரது விவரங்களை உள்ளடக்கிய "தேச விரோதக் கூறுகள்" என்ற புதிய வகை ஒன்று தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக, “இணைய வழி அச்சுறுத்தல் மற்றும் பெண்களை கொடுமைப் படுத்துதல்” ஆகியவை இந்த அறிக்கையில் சேர்க்கப் பட்டுள்ளன.
இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 542 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்ச சம்பவங்கள் மகாராஷ்டிராவில் (301) பதிவாகியுள்ளன.
11,601 பேர் பல்வேறு இணைய வழிக் குற்றங்களிலும் 8,306 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையிலும் குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சம்பந்தமான தரவு
கலவரங்கள்
2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த மொத்த கலவர வழக்குகளில் தமிழகம் 3.28 சதவீத பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் 21 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.
கலவரத்தைப் பொறுத்தவரை பஞ்சாப் மிகவும் அமைதியானது. ஏனெனில் இது ஒரு வழக்கை மட்டுமே பதிவு செய்துள்ளது.
சாலை விபத்துகள்
2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழகம் தற்போது சாலை விபத்துத் தரவு மேலாண்மை அமைப்பு (RADMS - Road Accidents Data Management System) என்ற அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது ஒவ்வொரு விபத்தையும் உடனடியாக பதிவு செய்து வலையமைப்பில் பதிவேற்றுவதை உறுதி செய்கிறது.
தேசத் துரோக வழக்குகள்
அஸ்ஸாம் அதிக எண்ணிக்கையிலான தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் அதிக எண்ணிக்கையிலான தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.
கைதிகள்
மொத்தம் 2,096 இந்திய சிறைக் கைதிகளில் 2,039 ஆண்களும் 57 பெண்களும் அடங்கியுள்ளனர். தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் (810) கொண்டு உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்
மூத்த குடிமக்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களை, குறிப்பாக கொலைகளைப் பதிவு செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
பெரியவர்களைக் குறி வைத்து கொள்ளை மற்றும் நகை பறிப்பு சம்பவங்களைப் புகாரளிப்பதில் மகாராஷ்டிராவிற்குப் பிறகு தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்கள்
இந்தியாவில் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் குற்றங்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 4,732 ஆக இருந்து, 2017 ஆம் ஆண்டில் 42,143 ஆக அது உயர்ந்துள்ளது.
இந்த குற்றங்களில் கிட்டத்தட்ட பாதி அளவில் (20,914) 49.6 சதவீத குற்றங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன.
சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் 2003, என்ற சட்டம் சுற்றுச்சூழல் குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டதன் காரணமாக குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.