நடைபாதைகளில் நடக்கும் உரிமை குறித்து உச்ச நீதிமன்றம்
June 25 , 2026 13 days 122 0
பாதுகாப்பான மற்றும் பிரிக்கப்பட்ட நடைபாதைகளில் நடக்கும் உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது சரத்தின் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று இந்திய உச்ச நீதிமன்றம் "மணியார் இலியாஸ் @ ஷேக் ரியாஸ் எதிர் பி. ஐயப்பன் மற்றும் பலர்" வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
தந்தையுடன் சாலையில் நடந்து சென்ற 5 வயது குழந்தை தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மோட்டார் வாகனங்களின் நடமாட்டத்தை விட பாதசாரிகளின் பாதுகாப்புக்கும் தடையற்ற நடைபாதைகளை அணுகுவதற்கும் முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நடக்கும் உரிமை என்பது கண்ணியமான வாழ்வின் இன்றியமையாத பகுதி என்றும், இது சரத்து 21-இன் கீழான வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடைபாதைகளைப் பாதுகாப்பதை ஒரு அரசியலமைப்பு கடமையாகக் கருதி செயல்படுமாறு நகராட்சிகள் மற்றும் மேம்பாட்டு ஆணையங்கள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதசாரிகளின் உரிமைகளை உறுதி செய்யவும், நகர்ப்புற சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் பிரத்யேக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.