பிரதமரின் வழக்கமான பதில் உரை இல்லாமலேயே, மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் நன்றியுரைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
காலை முதல் தொடர்ச்சியான இடையூறுகளுக்குப் பிறகு, சபாநாயகர் நன்றியுரைத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை வாக்கெடுப்புக்கு விட்டார்.
அவை நிராகரிக்கப்பட்டன.
பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜனவரி 28 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கான நன்றியுரைத் தீர்மானத்தைப் படித்துக் காட்டினார்.
எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தொடர்ந்தபோதிலும், அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பிரதமர் மக்களவையில் இல்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் அந்த அவையில் இருக்கவில்லை.
குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றியுரைத் தீர்மானம் பிரதமரின் பதில் உரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது கடைசியாக ஜூன் 2004-ல் ஆகும்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மக்களவையில் நடந்த விவாதத்திற்கு தனது பதில் உரையை வழங்க முடியவில்லை.
மாநிலங்களவையானது, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
இங்கு பிரதமரின் உரை 97 நிமிடங்கள் நீடித்தது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாத நிலையில், அவர்களால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டன.