நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு
August 4 , 2026 21 hrs 0 min 53 0
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படை ஆண்டை 2012=100 என்பதிலிருந்து 2024=100 என மாற்றி அமைத்துள்ளது.
இம்மாற்றம், 'குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வு 2023-24'-இன் புதுப்பிக்கப்பட்ட நுகர்வு எடைகளை (consumption weights) உள்ளடக்கியும், சந்தை உள்ளடக்கத்தை (market coverage) விரிவுபடுத்தியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
CPI 2024 தொடரின் கீழ், பணவீக்கத் தரவுகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கிடைக்கப்பெறும்.
CPI 2012 தொடரின் பணவீக்கத் தரவுகள் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கிடைக்கப் பெறும்.
இவ்விரு தொடர்களுக்கும் இடையே உள்ள பொருட்கள் தொகுப்பு (item basket), எடைகள், சந்தைப் பரவல் மற்றும் கணக்கீட்டு முறை ஆகியவற்றில் உள்ள மாற்றங்கள் காரணமாக, புதிய தொடரின் பணவீக்கத்தை முந்தைய தொடரின் பணவீக்கத்துடன் நேரடியாக ஒப்பிடுவது சாத்தியமற்றது.
புதிய தொடர் முதன்முறையாக கிராமப்புற வீட்டு வாடகையை உள்ளடக்கியுள்ளது; இதன் மூலம் கிராமப்புற வீட்டு நுகர்வு குறித்த தரவுகள் கணிசமாக மேம்படுத்தப் பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) என்பது குடும்பங்களால் நுகரப்படும் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பின் சில்லறை விலையில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுகிறது; இது இந்தியாவின் முக்கிய சில்லறைப் பணவீக்கக் குறியீடாகும் (CPI-இல் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் சதவீத மாற்றம்).
இந்தியாவின் ஒட்டுமொத்த CPI மதிப்பானது, கிராமப்புற CPI மற்றும் நகர்ப்புற CPI ஆகியவற்றை அவற்றின் மொத்த நுகர்வுப் பங்கிற்கு (எடைகளுக்கு) ஏற்ப இணைப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கக் கட்டுப்பாடு போன்ற முடிவுகளை எடுப்பதில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டும் முதன்மை குறியீடாகவும் CPI-அடிப்படையிலான பணவீக்கம் விளங்குகிறது.