நௌராதேஹி சரணாலயத்தில் சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகம்
November 4 , 2025 24 days 97 0
மத்தியப் பிரதேசத்தின் நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் ஆனது, குனோ தேசியப் பூங்கா மற்றும் காந்தி சாகர் சரணாலயத்திற்கு அடுத்தபடியாக, அந்த மாநிலத்தில் சிவிங்கிப் புலிகளுக்கான மூன்றாவது காப்பகமாக மாற உள்ளது.
நமீபியாவிலிருந்து பெறப்பட்ட சிவிங்கிப் புலிகள் நௌராதேஹியில் விடுவிக்கப் படும்.
குனோ மற்றும் காந்தி சாகரில் பதிவான புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான மேலாண்மையைத் தொடர்ந்து நௌராதேஹி தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்த நடவடிக்கையானது அவற்றின் வாழ்விடங்களைப் பல்வகைப்படுத்தும், குனோ தேசியப் பூங்கா மீதான அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சம்பல்-விந்தியன் நிலப் பரப்பில் ஒரு மாபெரும் எண்ணிக்கையை உருவாக்கும்.
நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் ஆனது 1,197 சதுர கி.மீ பரப்பளவில் பரவி உள்ள இந்தியாவின் மிகப்பெரிய சரணாலயங்களில் ஒன்றாகும்.
யமுனா மற்றும் நர்மதா நதிப் படுகைகளுக்கு நடுவே இந்தச் சரணாலயம் அமைந்து உள்ளது மற்றும் பாம்னேர், கோப்ரா மற்றும் பியர்மா போன்ற முக்கிய ஆறுகள் அதன் வழியாகப் பாய்கின்றன.
வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆசிய சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்டன.
இந்திய அரசானது, நமீபியாவிலிருந்து ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப் படுத்துவதற்காக சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தினைத் தொடங்கி, குனோ தேசியப் பூங்காவிலும் (2022) பின்னர் காந்தி சாகர் சரணாலயத்திலும் (2024) சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்தியது.
தற்போது மூன்றாவது வளங்காப்புத் தளமாகச் செயல்படும் நௌராதேஹி மத்திய இந்தியாவில் இந்த இனங்களின் விரிவாக்கம், மரபணு பல்வகைப்படுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பை உறுதி செய்கிறது.