பக்கிங்ஹாம் கால்வாயின் மையப்பகுதியில் உள்ள 7.2 கி.மீ தொலைவை மீண்டும் நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கான ₹876.35 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.
பக்கிங்ஹாம் கால்வாய் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சுமார் 450 கி.மீ நீளத்திற்கு பாய்கிறது; இதில் ஆந்திரப் பிரதேசத்தில் 250 கி.மீ மற்றும் தமிழ்நாட்டில் 200 கி.மீ அடங்கும்.
இது முதலில் 1806 ஆம் ஆண்டில் பசில் கோக்ரேன் என்பவரால் கட்டப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் கோக்ரேன் கால்வாய் என்று அழைக்கப்பட்டது.
1878 ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான பக்கிங்ஹாம் மற்றும் சந்தோஸ் கோமகனின் பெயரால் பக்கிங்ஹாம் கால்வாய் என மறுபெயரிடப்பட்டது.
முன்மொழியப்பட்ட நீர்வழிப் போக்குவரத்துப் பகுதி நேப்பியர் பாலத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலை வழியாக அடையாறு ஆறு வரை செல்லும், இதில் பயணிகள் படகுகள், மிதக்கும் உணவகங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை முன் மொழியப் பட்டுள்ளன.
வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் (316 கி.மீ) மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (110 கி.மீ) ஆகியவை 2016 ஆம் ஆண்டில் தேசிய நீர்வழிப் பாதை 4-இன் பகுதிகளாக அறிவிக்கப் பட்டன.