ஒரு நபர் மீது குற்றவியல் வழக்குகள் ஏதுமில்லாத போது, வங்கி கடன் நிலுவை வைத்துள்ளார் என்பது மட்டுமே அவரை வெளிநாடு செல்வதைத் தடுக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்கான உரிமை என்பது அரசியலமைப்பின் 21ஆவது சரத்தின் கீழ் உள்ள அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்துவதற்காக 'லுக் அவுட் சுற்றறிக்கையை' வெளியிட வேண்டும் என்ற வங்கியின் கோரிக்கையை "சட்டமாக" கருத முடியாது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் பெற்றவருக்காக உத்தரவாதம் அளித்தவர், பணம் சம்பாதித்து கடனை அடைப்பதற்காக வெளிநாடு செல்ல விரும்பிய வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மோசடி அல்லது குற்றவியல் வழக்கு இல்லாத நிலையில், வெறும் கடன் நிலுவையாளர் என்பதற்காக ஒருவரை இந்தியாவிலேயே இருக்கக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.