புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் - தமிழ்நாடு
November 4 , 2018 2603 days 891 0
2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை (Nenatal Mortality Rate - NMR) வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு விருதினை தமிழ்நாடு பெற்று இருக்கின்றது.
மத்திய அமைச்சகமானது அசாமின் காசிரங்காவில் நடந்த “இந்தியாவில் பொது மருத்துவத் துறையில் சிறந்த மற்றும் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் மற்றும் புதுமைகள்” என்பதன் மீதான 5வது தேசிய மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய மாநிலங்களுக்கு விருதுகளை வழங்கியது.
2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வருடாந்திர அளவில் அதிகப்படியாக குறைத்தமைக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது.
2030ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றான புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை 1000 பிறப்புகளுக்கு 12 என்ற விகிதத்தில் குறைக்கும் இலக்கை தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்திருக்கின்றது.
2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 14 என்ற விகிதத்தில் இருந்தது. இந்த விகிதம் 2016ஆம் ஆண்டில் மாதிரிப் பதிவீட்டு முறையின் படி 1000 பிறப்புகளுக்கு 12 என்ற அளவிற்கு சரிந்தது.