இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜனவரி 31 அன்று, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது மற்றும் அடுத்த ஆண்டுக்கான செயல்திட்டம் ஆகியவற்றினை இந்த அறிக்கை மதிப்பாய்வு செய்கிறது.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 2023 ஆம் நிதியாண்டில் 7 சதவீதம் என்ற அளவில் (நிகழ் நேர மதிப்பில்) வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான சில்லறைப் பணவீக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பிற்குள் மீண்டும் திரும்பியுள்ளது.
நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து வந்த போதும் அதிகளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கம் பதிவாகியுள்ள நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் நிகரப் பதிவும் வேகமான அளவில் பதிவாகியுள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் 5.8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதமானது, 2020-21 ஆம் ஆண்டில் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறையின் முதலீடு 9.3% ஆக அதிகரித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் 8.4% ஆக இருந்த சேவைத் துறையின் வளர்ச்சி 2023 ஆம் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் 9.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று, உலகிலேயே அதிக பணம் வரவு பெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
சேவை ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிதி வழங்கீட்டிற்குப் பங்களிக்கும் இரண்டாவது பெரிய மூல ஆதாரமாக இந்தப் பண வரவு திகழ்கிறது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறைக்கான கடன் வழங்கீட்டு வளர்ச்சி என்பது சராசரியாக 30.6 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
2019 ஆம் நிதியாண்டில் 180 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மருந்து உற்பத்தித் தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு (FDI) ஆனது 2022 ஆம் நிதியாண்டில் நான்கு மடங்கு உயர்ந்து, 699 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 9.3 மாத இறக்குமதியை உள்ளடக்கிய அந்நியச் செலாவணி கையிருப்பு 563 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, உலகிலேயே அதிக அந்நியச் செலாவணி இருப்பு கொண்டுள்ள நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் மூலமான பரிவர்த்தனைகள் மதிப்பு (121 சதவீதம்) மற்றும் அளவு (115 சதவீதம்) ஆகியவற்றின் அடிப்படையில் 2019-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிகரித்துள்ளதன் மூலம் சர்வதேச அளவில் இந்த முறையினை ஏற்பதற்கான ஒரு வாய்ப்பினை இது வகுத்தது.
இந்தியாவில் உள்ள மொத்தத் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.8 கோடியாக உள்ள நிலையில் (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை), இதில் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் பதிவான சந்தாதாரர்களின் எண்ணிக்கை 44.3 சதவீத உள்ளது.
பிரசார் பாரதியானது (இந்தியாவின் தன்னாட்சிப் பொதுச் சேவை ஒளிபரப்பாளர்) - 479 நிலையங்களில் இருந்து 23 மொழிகளில், 179 பேச்சு வழக்குகளில் ஒளிபரப்பப் படுகிறது.
இது பரப்பளவில் 92 சதவீதப் பரவலையும், மொத்த மக்கள் தொகையில் 99.1 சதவீத நபர்களையும் சென்றடைகிறது.