ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கியதன் மூலம் 2020 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டம் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் தொடங்கி வைக்கப் பட்டது.
2012 ஆம் ஆண்டில் இந்தியா போலியோவை முற்றிலுமாக ஒழித்தது.
2015 ஆம் ஆண்டில், இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப் பட்டது.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ நோய் அதிகரித்து வருவதால், 2020 ஆம் ஆண்டில் மேலும் ஒரு தேசிய நோய்த் தடுப்புத் தினத்தை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் போலியோ நோய் பதிவாகியுள்ளது.
இந்தியா 2016 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று “போலியோ இல்லாத நாடாக” முழு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்தது.
வேலூர் (தமிழ்நாடு) நகரமானது உத்திசார் திட்டத்தின் மூலம் 100% போலியோ இல்லாத முதலாவது இந்திய நகரமாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பிற பகுதிகள் 1995 ஆம் ஆண்டில் இந்த உத்திசார் திட்டத்தை ஏற்றுக் கொண்டன.
கடந்த 16 ஆண்டுகளாக தமிழக மாநிலமானது போலியோ அற்ற மாநிலமாக இருந்து வருகின்றது.
IPV மற்றும் OPV
நாட்டில் இரண்டு வகையான போலியோ தடுப்பூசிகள் வழங்கப் படுகின்றன.
இதில் IPV (Inactivated Polio Vaccine – வீரியம் அழிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி) மற்றும் OPV (Oral Polio Vaccine - வாய்வழி போலியோ தடுப்பூசி) ஆகியவை அடங்கும்.
IPV என்பது மற்ற தடுப்பூசிக் கலவைகளுடன் இணைந்து வழங்கப்படும் ஒரு கொடிய வகைக்கான போலியோ வைரஸ் தடுப்பூசி ஆகும்.
இதில் டிப்தீரியா, தொடர் இருமல், வாய்ப்பூட்டு நோய், ஹீமோபிலஸ்,கல்லீரல்அழற்சி பி வகை மற்றும் சளிக் காய்ச்சல் ஆகியவை அடங்கும்.
OPV ஐ விட IPV மிகவும் திறனுள்ளதாகும்.
இது ஏற்கனவே OPV மூலம் நோய்த் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளிடையே குடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.
இந்தியாவிற்குள் வைரஸ் உள்நுழைவதைத் தடுப்பதற்காக, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சிரியா மற்றும் கேமரூன் போன்ற போலியோ பாதிப்புக்குள்ளான நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றிற்கு இடையே பயணிப்பவர்களுக்கு வாய்வழி போலியோ தடுப்பூசி வழங்குவதை இந்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்டாயம் ஆக்கியுள்ளது.