TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கிடையிலான மன்ற ஆணை, 1990-இல் திருத்தம்

September 24 , 2026 9 days 117 0
  • மாநிலங்களுக்கிடையிலான மன்ற ஆணை, 1990-இல் திருத்தத்தை குடியரசுத் தலைவர் அறிவித்தார்.
  • உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கிடையிலான மன்ற (திருத்த) ஆணை, 2026-ஐ அறிவித்தது.
  • அரசியலமைப்பின் 263-வது சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி குடியரசுத் தலைவரால் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • குறிப்பிட்ட அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகள் அந்தந்த மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசங்களில் அமலில் இருக்கும்போது, மாநிலங்களுக்கு இடையிலான மன்றக் கூட்டங்களில் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் பங்கேற்புக்கு வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.
  • இந்த அறிவிப்பின்படி, அரசியலமைப்பின் 356-வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட ஒரு பிரகடனம் ஒரு மாநிலத்தில் அமலில் இருக்கும்போது, அந்த மாநிலத்தின் ஆளுநர் அழைக்கப்படுவார்.
  • தேசிய தலைநகர் பிரதேசமான டெல்லியைப் பொறுத்தவரை, அரசியலமைப்பின் 239AB சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட ஒரு ஆணை அமலில் இருக்கும்போது, துணைநிலை ஆளுநர் அழைக்கப்படுவார்.
  • புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, 1963 ஆம் ஆண்டின் ஒன்றியப் பிரதேசங்கள் அரசாங்கச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அமலில் இருக்கும்போது துணைநிலை ஆளுநர் அழைக்கப்படுவார்.
  • அதேபோல், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில், 2019 ஆம் ஆண்டின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அமலில் இருக்கும்போது துணைநிலை ஆளுநர் அழைக்கப் படுவார்.
  • மாநிலங்களுக்கிடையிலான மன்றம், 1990 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான மன்ற ஆணை மூலம் அரசியலமைப்பின் 263 வது பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
  • அசல் ஆணை 1990 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப் பட்டது.
  • இது 1983 ஆம் ஆண்டின் சர்க்கரியா ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றியது.
  • மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலோ அல்லது மாநிலங்களுக்கு இடையேயோ ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மன்றம் ஆலோசனை வழங்கும் பங்கை வகிக்கிறது, மேலும் இது இயல்பாகவே ஒரு நிரந்தர அமைப்பு அல்ல.
  • இதற்கு இந்தியப் பிரதமர் தலைமை தாங்குகிறார்.
  • சட்டமன்றங்களைக் கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் முதலமைச்சர்களும், சட்டமன்றங்கள் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • ஆறு மத்திய அமைச்சரவை தகுதி வாய்ந்த அமைச்சர்கள் பிரதம மந்திரியால் நியமிக்கப் படுவார்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்