இந்திய தேசிய பங்குச் சந்தையானது (NSE), மின்னணு தங்க ரசீதுகளை (EGRs) அறிமுகப் படுத்தியுள்ளது.
இது இந்தியாவின் தங்கச் சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் முறைப்படுத்தலைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய பிரிவாகும்.
தங்க வர்த்தகத்திற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தளத்தை வழங்குவதன் மூலம், பௌதீகத் தங்கத்திற்கும் நிதிச் சந்தைகளுக்கும் இடையிலான இடைவெளியை இது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EGRs என்பவை பௌதீகத் தங்கத்தின் உரிமையைக் குறிக்கும், மின்னணு மயமாக்கப் பட்ட பத்திரங்கள் ஆகும்.
பௌதீகத் தங்கம், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகங்களில் சேமிக்கப்பட்டு, வைப்பகங்கள் மூலம் மின்னணு முறையில் வைத்திருக்கப்படுகிறது.
ஒவ்வொரு EGR-உம் முழுமையாக பௌதீகத் தங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் பரிவர்த்தனைச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படலாம், இது தங்கத்தை முறையான நிதி அமைப்பில் ஒருங்கிணைக்கிறது.
EGRs, முதலீட்டாளர்கள் தங்கத்தை உறுதியான தரத்துடன் மின்னணு முறையில் வைத்திருக்க அனுமதிக்கும், மேலும் பௌதீக மற்றும் டிஜிட்டல் வடிவங்களுக்கு இடையில் தடையற்ற மாற்றத்தையும் செயல்படுத்தும்.
டிமேட் வடிவில் உள்ள மற்ற நிதிக் கருவிகளைப் போலவே, முதலீட்டாளர்கள் குறைந்த அளவிலும் பங்கேற்கலாம் என்பதோடு இது மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.
தங்க வர்த்தகத்திற்கான ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான சூழலமைப்பை உருவாக்குவதை NSE நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம், திறமையான விலை நிர்ணயம், மேம்பட்ட சந்தைப் பங்கேற்பு மற்றும் நகை வியாபாரிகள், சுத்திகரிப்பாளர்கள், வர்த்தகர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பங்கு தாரர்களிடையே அதிகரித்த நம்பிக்கை ஆகியவற்றை இது சாத்தியமாக்குகிறது.