கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக 2026 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது திட்டத்தை "ஏற்க முடியாதது" மற்றும் "அனுமதிக்க முடியாதது" என்று குறிப்பிட்ட தமிழ்நாடு, இது குறித்து புதிய தீர்ப்பாயம் அமைக்கக் கோரியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் ஒரு சமநிலை நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கான கர்நாடகாவின் தன்னிச்சையான திட்டத்திற்கு இத்தீர்மானம் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.
இத்திட்டமானது காவிரி நீர் விவாத நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு (2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5) மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16) ஆகியவற்றை மீறுவதாக அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்திற்கு எவ்வித தொழில்நுட்ப அல்லது சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்க வேண்டாம் என இத்தீர்மானம் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
காவிரிப் படுகை ஒரு பற்றாக்குறைப் படுகை என்றும், அதில் கிடைக்கும் நீர் ஏற்கனவே படுகை மாநிலங்களுக்கு இடையே பங்கிடப்பட்டுள்ளது என்றும் அதில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சிக்கல்கள் சட்டம், 1956'-இன் பிரிவு 4-இன் கீழ் புதிய தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசைப் பேரவை கேட்டுக் கொண்டதோடு, கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) பரிசீலிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ கூடாது என மத்திய நீர் ஆணையத்தையும் வலியுறுத்தி உள்ளது.