ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்துத் தகுதி நீக்கம்
March 29 , 2023 872 days 362 0
சூரத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப் பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 102(1)(E) சட்டப் பிரிவின் விதிமுறைகளின்படி, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவுடன் சேர்த்து இந்த தகுதியின்மை அறிவிக்கப்பட்டது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3) வது பிரிவானது, "எந்தவொரு குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகையக் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதோடு, மேலும், அவர் விடுவிக்கப் பட்டதிலிருந்து மேலும் ஆறு வருடங்கள் வரை அவர் தொடர்ந்து தகுதியிழப்பு (போட்டியிடுவதில்) செய்யப் படுவார் என்று கூறுகிறது.
அரசியலமைப்பின் 102வது சட்டப்பிரிவானது, ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் பற்றி கூறுகிறது.
102(1)வது சட்டப்பிரிவின் (e) என்ற துணைப் பிரிவானது, "பாராளுமன்றத்தினால் உருவாக்கப் பட்ட எந்தவொருச் சட்டத்தினாலோ அல்லது அந்தச் சட்டத்தின் கீழ் அவர் தகுதியற்றவராக இருந்தாலோ" ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்று கூறுகிறது.
இதற்கான சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமாகும்.