ஓய்வுபெற்ற நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes - OBCs) துணை வகைப்படுத்துதல் ஆணையமானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியன்று அரசியலமைப்பின் 340வது பிரிவின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அமைக்கப் பட்டுள்ளது.
மத்தியப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைப்படுத்துதல் குறித்தப் பிரச்சினையை ஆராய இது அமைக்கப் பட்டுள்ளது.
இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
இந்த ஆணையமானது தனது பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு, அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
OBCகளுக்கான மத்தியப் பட்டியலில் உள்ள விளிம்பு நிலைச் சமூகங்களின் நலனுக்காக இந்த ஆணையமானது பரிந்துரைகளை வழங்க உள்ளது.
OBCகளின் துணை வகைப்படுத்துதலானது OBC சமூகங்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகள் ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்ய இருக்கின்றது.
எனவே, மத்திய அரசு தற்பொழுது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைகளின் அடிப்படையில் பின்தங்கிய வகுப்பின் கீழ் வரும் சாதிக் குழுக்களை மேலும் வகைப்படுத்துவதன் மூலம் இடஒதுக்கீட்டுச் சலுகைகளை இன்னும் சமமாக வழங்கப் படுவதை உறுதி செய்ய முயல்கின்றது.
தற்போதைய நிலையில் துணை வகைப்படுத்துதலானது அறவே இல்லை. 27% இட ஒதுக்கீடானது ஒரே சீரான இடஒதுக்கீடாகவே உள்ளது.