தேசிய கீதத்தைப் போலவே 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில், தேசியக் கவுரவச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971-இல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை முன்மொழிந்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தமானது, 'ஜன கண மன' (தேசிய கீதம்) பாடலுக்கு இணையான சட்டப் பாதுகாப்பை 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதையோ அல்லது பாடுவதற்கு இடையூறு விளைவிப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற இது முயல்கிறது.
தற்போது, தேசிய கவுரவச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971 என்பது தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை அவமதிப்போருக்குத் தண்டனை வழங்குகிறது.
தற்போதைய சட்டத்தின் கீழ், இந்தச் சின்னங்களை உள்நோக்கத்துடன் அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது குறிப்பிட்ட சட்டப் பிரிவு எதுவும் இல்லை.
வந்தே மாதரம் பாடலானது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்யால் எழுதப்பட்டு, 1882 ஆம் ஆண்டு அவரது 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வெளியிடப் பட்டது.
ஆனந்தமடம் நாவலானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த சந்நியாசிகள் கிளர்ச்சியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
1937 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக ஏற்றுக்கொண்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வந்தே மாதரத்திற்கு 'தேசியப் பாடல்' என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பாடலின் ஆறு பத்திகளையும் (சுமார் மூன்று நிமிடங்கள்) பாடலாம் அல்லது இசைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் ஆகிய இரண்டும் இசைக்கப்படும் நிகழ்வுகளில், தேசிய கீதத்திற்கு முன்னதாக தேசியப் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதல்கள் அறிவுரைத் தன்மை உடையவை மற்றும் இதற்குச் சட்டபூர்வமான ஆதரவு இல்லை.