வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2020
September 28 , 2020 1781 days 1049 0
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 என்ற சட்டத்தைத் திருத்த, செப்டம்பர் 23 அன்று பாராளுமன்றத்தால் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா அச்சட்டத்தின் நிதி நடைமுறைகளைச் சீராக்க வேண்டி, அதன் விதிகளைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதாவானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டுப் பங்களிப்பைப் பயன்படுத்துவதில் இணக்க முறையை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மசோதாவின் அம்சங்கள்
இது ‘அரசு ஊழியர்கள்’ எந்தவொரு வெளிநாட்டு நிதியையும் பெறுவதைத் தடை செய்ய முற்படுகிறது.
இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டை தற்போதுள்ள 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முன்மொழிகிறது.
இது எந்தவொருச் சங்கத்திற்கும் / நபருக்கும் வெளிநாட்டுப் பங்களிப்பு சேர்வதைத் தடை செய்ய முயல்கிறது.
வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற தகுதியான அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது சங்கங்களின் அனைத்து அலுவலர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற முக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு ஆதார் அட்டையைக் கட்டாய அடையாள ஆவணமாக மாற்ற இது முன்மொழிகிறது.