1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (பாரத் சோடோ அந்தோலன்) தொடங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) அமர்வின் போது, பம்பாயில் (தற்போதைய மும்பை) உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று இவ்வியக்கம் தொடங்கப்பட்டது.
மகாத்மா காந்தி இவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கியதுடன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, "செய் அல்லது செத்து மடி" என்ற புகழ் பெற்ற அழைப்பை அவர் விடுத்தார்.
இவ்வியக்கம் முக்கியமாக கிரிப்ஸ் தூதுக்குழுவின் (1942) தோல்வி மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டது.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இவ்வியக்கம் ஆங்கிலேயர்களால் ஒடுக்கப்பட்டாலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததுடன், 1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்தை நோக்கிய பாதையை வலுப்படுத்தியது.