2025 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இது ஒன்றியப் பிரதேச அரசு சட்டம், 1963 மற்றும் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிகிறது.
இந்த மசோதாவானது 75 வது சரத்து (மத்திய அமைச்சர்கள்), 164 வது சரத்து (மாநில அமைச்சர்கள்) மற்றும் 239AA சரத்து (டெல்லியின் தேசிய தலைநகரப் பிராந்தியம்) ஆகியவற்றைத் திருத்துகிறது.
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் (பிரதமர், முதல்வர்கள், மத்திய/மாநில அமைச்சர்கள்) பதவி நீக்கம் செய்யப்படுதல் மற்றும் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படுவது தொடர்பாக அரசியலமைப்பில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றச்சாட்டில் ஓர் அமைச்சர் (பிரதமர்/முதல்வர்/அமைச்சர்) கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், பின்வரும் நடவடிக்கையை மேற் கொள்ளலாம்:
குடியரசுத் தலைவர் (பிரதமரின் ஆலோசனையின் பேரில்/நேரடியாக) மத்திய அமைச்சர்கள் /பிரதமரை பதவி நீக்கலாம்.
ஆளுநர் (முதல்வரின் ஆலோசனையின் பேரில்) மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கலாம்.
ஆளுநர் (நேரடியாக) மாநில முதலமைச்சரைப் பதவி நீக்கலாம்.
ஒன்றியப் பிரதேசங்கள் தொடர்பான திருத்தங்கள் ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர்கள்/அமைச்சர்களின் பதவி நீக்கத்தினை உள்ளடக்கியது.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அமைச்சர்களை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கலாம்.
சரத்து 75 ஆனது முதன்மையாக பிரதமர் உட்பட அமைச்சர்கள் குழுவின் நியமனம் மற்றும் பொறுப்புகளைக் கையாள்கிறது.
சரத்து 164 ஆனது ஒரு மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் குழுக்கள் தொடர்பான விதிகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
அரசியலமைப்பின் சரத்து 239AA டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்தியத்திற்கான சிறப்பு விதிகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
மசோதாவின் ஒரு பிரிவு அல்லது மசோதாவின் விரிவான ஆய்வு போன்ற சிறப்பு நோக்கத்திற்காக ஒரு கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) ஆனது பாராளுமன்றத்தால் அமைக்கப் படுகிறது.
இரு அவைகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இந்தக் குழு, அதன் பதவிக் காலம் முடிந்ததும் அல்லது அதன் பணி முடிந்ததும் கலைக்கப்படுகிறது.