அரசியலமைப்பு (நூற்று முப்பத்து ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ மக்களவை நிராகரித்தது.
அவைக்கு வந்து வாக்களித்த 528 உறுப்பினர்களில், 298 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 230 பேர் எதிராகவும் வாக்களித்த வேளையில் யாரும் வாக்கெடுப்பை புறக்கணிக்கவில்லை, இதன் மூலம் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறி இந்த மசோதா தோல்வியடைந்தது.
ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேறுவதற்கு சிறப்புப் பெரும்பான்மையை (அவைக்கு வந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு) பெறுவது கட்டாயமாகும்.
இந்தத் தோல்விக்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 மற்றும் ஒன்றியப் பிரதேசச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகியவற்றை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திரும்பப் பெற்றார்.
இந்த மூன்று மசோதாக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், இவற்றை தனித்தனியாகப் பரிசீலிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று மசோதாக்களையும் ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால், இது நாடாளுமன்ற விதிகளுக்கும் நடைமுறைக்கும் எதிரானது எனக் கூறினார்.
இந்த நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் இவ்வாறு மசோதாக்களை இணைப்பதற்கு முன்மாதிரிகள் இருப்பதாகவும், மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கு இது அவசியம் என்றும் கூறினார்.
மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசத்திலேயே அதன் வரைவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டதால், போதிய நேரமின்மை காரணமாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதற்காக, மசோதா அறிமுக நிலையிலேயே குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக வாக்குப் பிரிப்பு முறை மூலமான வாக்கெடுப்பை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
வாக்குப்பிரிப்பு வாக்கெடுப்பு என்பது ஒரு மசோதாவுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாக்குகளின் சரியான எண்ணிக்கையை பதிவு செய்வதாகும்; இது வழக்கமாக சர்ச்சைக்குரிய சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா ஒன்று தோல்வியடைவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும்.