2010-2019-ல் தொற்றா நோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள்
September 17 , 2025 16 hrs 0 min 39 0
2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகரிப்பு பதிவானதாக லான்செட் ஆய்வு காட்டுகிறது.
இந்த ஆய்வறிக்கையானது, 185 நாடுகளில் COVID-19 பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் பதிவான உயிரிழப்பு போக்குகளை ஆய்வு செய்தது.
இந்தியப் பெண்களில், தொற்று அல்லாத நோயால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கான நிகழ்தகவு 2001 ஆம் ஆண்டில் 46.7% ஆக இருந்தது.
2011 ஆம் ஆண்டில் இந்த நிகழ்தகவு 46.6% ஆக இருந்தது மற்றும் 2019 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களில் இது 48.7% ஆக உயர்ந்தது.
இந்த அதிகரிப்பானது கல்லீரல் சிரோசிஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் இதரப் பாதிப்புகள் தவிர முக்கியக் காரணங்களால் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்கள் மோசமடைவதோடு தொடர்பு கொண்டுள்ளது.
பெண்களுடன் ஒப்பிடும் போது இந்திய ஆண்களில், தொற்று அல்லாத நோய் காரணமான உயிரிழப்பின் அதிகரிப்பு குறைவாக இருந்தது.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், குருதியூட்டக்குறை இதய நோய் (இஸ்கிமிக்) மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்ற பாதிப்புகளுக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இந்திய ஆண்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க உதவியது.
2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பெண்களில் 152 நாடுகளிலும், ஆண்களில் 147 நாடுகளிலும் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது.
இந்த நாடுகள் உலகளாவிய பெண்களின் மக்கள்தொகையில் 82% மற்றும் ஆண்களின் மக்கள்தொகையில் 79% ஆகும்.
டென்மார்க் நாட்டில் சிறந்த முன்னேற்றத்துடனும், அமெரிக்காவில் மிகக் குறைவான முன்னேற்றத்துடனும் உயர் வருமானம் கொண்ட அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் சரிவு பதிவானது.
சீனா, எகிப்து, நைஜீரியா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலினத்திலும் சரிவுகள் பதிவானது.
தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு இரு பாலினத்தவரிலும் அதிகரித்த சில நாடுகளில் இந்தியாவும் பப்புவா நியூ கினியாவும் அடங்கும்.
2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பெண்கள் மத்தியில் 41% நாடுகளிலும் ஆண்கள் மத்தியில் 39% நாடுகளிலும் முந்தைய தசாப்தத்தை விட அதிக முன்னேற்றம் பதிவாகின.