2010 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் கடன் தமிழ்நாட்டின் கடனை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
இன்று, தமிழ்நாட்டின் கடன் நிலுவை உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.
2025-26 நிதியாண்டின்படி, தமிழ்நாட்டின் கடன் நிலுவை, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 26.1% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது 2024-25 ஆம் ஆண்டில் 26.4% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 26.6% ஆகவும் இருந்தது.
கோவிட்-19 உச்சநிலைக்குப் பிறகு தமிழ்நாட்டின் கடன் விகிதமானது படிப்படியாகக் குறைந்து வருகிறது, இருப்பினும் இது கோவிட்- தொற்றுக்கு முந்தைய நிலைகளை விட அதிகமாகவே உள்ளது.
மாறாக, உத்தரப் பிரதேச மாநிலம் 2025-26 நிதியாண்டின் இறுதியில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 29.4% நிலுவைக் கடன்களுடன் முடிவடையும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இது 2024-25-ஆம் ஆண்டில் இருந்த 30.8% என்ற அளவிலிருந்து குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் அளவு தற்போது அதிகமாக இருந்தாலும், அதன் பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடும் போது உத்தரப் பிரதேசமே தமிழ்நாட்டை விட அதிக கடன் சுமையுடன் உள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ₹35.7 லட்சம் கோடி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் உள்ளது என்ற நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக இருந்த போதிலும், அதன் ₹30.8 லட்சம் கோடி பொருளாதாரத்தை விட தமிழ்நாட்டின் தனிநபர் பொருளாதாரம் கணிசமாகப் பெரியது.
தமிழ்நாடு தனது வருவாய் வரவுகளில் ஒரு பெரிய பகுதியை வட்டித் தொகையினைச் செலுத்துவதற்காகச் செலவிடுகிறது என்ற நிலையில் இது 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 21% ஆகும்.
இது தமிழ்நாட்டை அதிக வட்டிச் சுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக ஆக்குகிறது.
தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2025-26 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான 3.3% என்பதை விடக் குறைவு மற்றும் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மை (FRBM) கட்டமைப்புக்குள் இது முழுமையாக உள்ளது.
2012-13 முதல் 2021-22 வரையிலான பத்து ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டின் சராசரி உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதன் சராசரி உண்மையானப் பயனுள்ள வட்டி விகிதத்தை விட சுமார் 2.1 சதவீதப் புள்ளிகள் அதிகமாக இருந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று அதிர்ச்சியை உள்ளடக்கிய மிகச் சமீபத்திய ஐந்து ஆண்டு காலப் பகுதியில் கூட, வளர்ச்சிக்கும் வட்டிக்கும் இடையிலான வேறுபாடு 1.3 சதவீதப் புள்ளிகளாக நேர்மறையாகவே உள்ளது.
வளர்ச்சி என்பது தொடர்ந்து பயனுள்ள கடன் வாங்கும் செலவை விட அதிகமாக இருக்கும் போது, முதன்மைப் பற்றாக்குறைகள் மிகவும் அதிகமாக இல்லாத வரையில், கடன் விகிதங்கள் நிலை பெறுகின்றன அல்லது குறைகின்றன.
இதில் தமிழ்நாட்டின் நிலை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%க்கும் குறைவாகவே இருந்துள்ளது.
குறிப்பாக 2020-21 மற்றும் 2023-24- ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தமிழ்நாடு சராசரியாக 7%க்கும் அதிகமான உண்மையான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பராமரித்தது என்ற நிலையில் இதில் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகள் சீராக விரிவடைந்தன.
பொருளாதாரம் கடனால் தேக்கமடையவில்லை, மாறாக அதன் மூலம் விரிவடைந்தது.
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனி நபர் தலா வருமானம் ₹3.53 லட்சமாக இருந்தது என்ற நிலையில், இது உத்தரப் பிரதேசத்தின் ₹1.07 லட்சத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இது பல தசாப்தங்களாக நீடித்த அதிக உற்பத்தித் திறன், தொழில்மயமாக்கல் மற்றும் மனித மூலதன உருவாக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு அதிக அளவில் நகரமயமாக்கப் பட்டுள்ளது என்பதும் மிக முக்கியமானது, ஏனெனில் இது அதிக அளவு வரி வசூலிக்கும் திறன், சிறந்த சேவை வழங்கல் மற்றும் பன்முகப் படுத்தப் பட்ட வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்.
மனித மேம்பாட்டுக் குறிகாட்டிகள் இந்த நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.
எழுத்தறிவு, சுகாதார வசதி மற்றும் மக்கள்தொகை மாற்றம் ஆகியவற்றில் தமிழ்நாடு பெரும்பாலான மாநிலங்களை விடத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது.
இந்த விளைவுகள் சார்பு விகிதங்களைக் குறைப்பதன் மூலமும், தொழிலாளர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் மூலமும் நீண்ட கால நிதி அழுத்தங்களைக் குறைக்கின்றன.
முதலீடு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றில் தான் தமிழ்நாட்டின் கதை அதனை மிகவும் தொலைநோக்குடையதாகிறது.
2025-26 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மூலதனச் செலவினங்களில் 22% அதிகரிப்பைத் திட்டமிட்டது.
எதிர்கால உற்பத்தித் திறனுக்கு நிதியளிக்கும் கடனும், வருவாய் இடைவெளிகளை நிரப்புவதற்காக மட்டுமே வாங்கப்படும் கடனும் ஒன்றல்ல.
செலவினங்களின் கட்டமைப்பு முக்கியமானது என்பதோடு தமிழ்நாட்டின் மூலதனம் சார்ந்த வரவு செலவுத் திட்டமானது, ஒரு பொருளாதாரம் இன்னும் முதலீட்டின் மூலம் முன்னேறிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.
தமிழ்நாடு தனது வருவாய் வரவுகளில் 75% அளவை தனது சொந்த ஆதாரங்களில் இருந்து திரட்டுகிறது.
25% என்பது மத்திய வரிகளில் அதன் பங்கு மற்றும் மானியங்கள் மூலம் வருகிறது.
மாறாக, உத்தரப் பிரதேசம் தனது வருவாய் வரவுகளில் பாதியளவிற்கு மேல் மத்திய அரசைச் சார்ந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் வலுவான வரித் தளங்கள், அதிக வரி இணக்கம் மற்றும் அடர்த்தியான பொருளாதார நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.
முன்கூட்டியே தொழில்மயமான, மனித மேம்பாட்டில் முதலீடு செய்த மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், தேசிய வளர்ச்சி மற்றும் வரி வசூலுக்கு விகிதாசாரமற்ற முறையில் தொடர்ந்து பங்களித்தாலும், இப்போது அவை மிகவும் கடுமையான கடன் வாங்கும் கட்டுப்பாடுகளையும் குறைந்த அளவு நிதிப் பரிமாற்றங்களையும் எதிர்கொள்கின்றன.
மாநிலங்கள் தங்கள் கடன்களை என்ன செய்தன, அவைகள் என்ன மாதிரியான பொருளாதாரங்களை உருவாக்கின, மற்றும் என்ன மாதிரியான எதிர்காலங்களுக்கு நிதியளிக்கின்றன என்பதைப் பற்றியதுதான் இது.