குஜராத் மாநிலதில் உள்ள கக்ராபர் அணுமின் நிலையத்தில் (KAPS) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு 700 MWe திறன் கொண்ட அழுத்தப்பட்ட கன நீர் அணு உலை வகைகளுக்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) சமீபத்தில் 5 ஆண்டு காலச் செயல்பாட்டு உரிமத்தை வழங்கியது.
இது இந்திய அணுசக்திக் கழகத்தின் (NPCIL) 700 MWe திறன் கொண்ட அளவில் 10 PHWR உலைகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.
PFBR வகைகளைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அணு மின் நிலையங்களையும் NPCIL சொந்தமாக வைத்து, இயக்குகிறது.
PFBR வகைகள் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திற்குச் சொந்தமானவை ஆகும்.
இந்தியாவானது தற்போது 220 MWe திறன் கொண்ட 15 PHWRகளையும், 540 MWe திறன் கொண்ட 2 PHWRகளையும் இயக்குகிறது.
இராஜஸ்தானின் இராவத்பட்டாவில் ஏற்கனவே 700 MWe திறன் கொண்ட ஓர் உலை உள்ளது.
PHWR என்பது கன நீரை (டியூட்டீரியம் ஆக்சைடு, D₂O) ஒரு குளிரூட்டியாகவும் வேக மிதமாக்கியாகவும் பயன்படுத்தும் ஒரு வகை அணு உலையாகும்.
இயற்கை அல்லது சற்று செறிவூட்டப்பட்ட யுரேனியம் இதற்கு எரிபொருளாகச் செயல் படுகிறது.
AERB என்பது நாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சுத் தொழில்நுட்பங்களின் மிகவும் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமாகும்.
AERB ஆனது 1983 ஆம் ஆண்டில் 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.
இது அணுசக்தித் துறையின் (DAE) கீழ் ஒரு சுயாதீன அமைப்பாக செயல்படுகிறது.
இந்தியாவின் அணுசக்தி திறன் ஆனது தற்போது 8.18 GW ஆக உள்ளது.
அதன் இலக்குகள் 2031–32 ஆம் ஆண்டில் 22.48 GW ஆகவும், 2047 ஆம் ஆண்டில் 100 GW ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.