75 பழங்குடியின மாவட்டங்கள் - காசநோய் தடுப்பு நடவடிக்கைகள்
August 31 , 2022 1051 days 597 0
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அதிக நோய் சுமை கொண்ட 75 பழங்குடியின மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்தும் காசநோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவைக் காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.
பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் & குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் காசநோய்ப் பிரிவு ஆகியவை ‘பழங்குடியினர் காசநோய் முன்னெடுப்பின்' கீழ் 100 நாட்கள் அளவிலான ஆஸ்வாசன் என்ற பிரச்சாரத்தின் மூலம் பெற்றத் தகவல்களைப் பரப்புவதற்காக சமீபத்தில் ஒரு தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தன.
பழங்குடியினர் காசநோய் முன்னெடுப்பு என்பது பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் காசநோய்ப் பிரிவு ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இதற்குச் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை ஒரு தொழில்நுட்பப் பங்கு தாரராகவும், பிரமல் ஸ்வஸ்த்யா ஒரு அமலாக்கப் பங்குதாரராகவும் தங்களது ஆதரவுகளை வழங்குகின்றன.
பழங்குடியினர் காசநோய் முன்னெடுப்பின் கீழ், இந்தியாவின் 174 பழங்குடி மாவட்டங்களில் காசநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறிவதற்காக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்வாசன் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.