2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று இந்திய உச்ச நீதிமன்றமானது, உடனடி முத்தலாக் (தலாக்-இ-பிதாத்) முறையை அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் இந்த நடைமுறையை தடை செய்யுமாறு அரசைக் கேட்டுக் கொண்டது.
இதனால் இஸ்லாமிய பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) அவசரச் சட்டமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
2019 ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியுடன் இந்த அவசரச் சட்டம் காலாவதியாக இருந்த நிலையில் இதனை சட்டமாக மாற்றுவதற்காக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் புதிய மசோதா ஒன்றை அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது.
இருப்பினும் இந்த மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்படவில்லை.
மீண்டும் 2018 ஆம் ஆண்டின் அவசரச் சட்டம் காலாவதியாகும் முன்னரே அரசானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று அதனை மறு பிரகடனம் செய்தது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று குடியரசுத் தலைவர் 2019 ஆம் ஆண்டின் முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு மறு ஒப்புதல் அளித்தார்.
இந்த முத்தலாக் அவசரச் சட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று காலாவதியாவதாக இருந்தது.
எனவே, இச்சட்டத்திற்கான மசோதாவானது ஜூன் 25 அன்று மக்களவையிலும் பின்னர் ஜூலை 30 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்று குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
இந்த மசோதாவானது அரசியலமைப்பின் சரத்து 44-ன் (பொது சிவில் சட்டம்) கூறுகளுக்கு ஒத்ததாக உள்ளது.