சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை “Global Economy in Crosscurrents of War and Technology” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை 2026 ஆம் ஆண்டில் 3.0% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 3.4% ஆகவும் கணித்துள்ளது. மேலும், புவிசார் அரசியல் பதற்றங்களால் வளர்ச்சி பாதிக்கப்படும் அதே வேளையில், தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் அதற்கு ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் இரண்டு முக்கிய சக்திகளாக, மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளால் உந்தப்படும் வளர்ச்சி ஆகியவற்றை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
எரிசக்தி விலை அழுத்தங்கள் காரணமாக 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பண வீக்கக் கணிப்பை 4.7% ஆக IMF திருத்தியுள்ளதால், உலகளாவிய பணவீக்கம் தொடர்ந்து ஒரு கவலையாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வலுவான உள்நாட்டுத் தேவையால் ஆதரிக்கப்பட்டு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 6.4% ஆகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இதன்மூலம் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.