OBC அந்தஸ்து குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து
November 15 , 2026 6 hrs 0 min 62 0
தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சில கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் மதம் மாறியவர்களைச் சேர்த்ததன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலில் சேர்ப்பது அல்லது தொடர்ந்து நீடிக்கச் செய்வது என்பது சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலைக்கான ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ சாணார் மற்றும் கிறிஸ்தவ கிராமணி சமூகங்கள் மற்றும் மீனவ சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சிலரைச் சேர்த்தது தொடர்பான வழக்கில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சேர்க்கைகள் மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று வாதிட்டு மனுதாரர் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.
பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் சரத்து 16(1) மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சரத்து 16(4) ஆகியவை இந்த வழக்கில் தொடர்புடையவை ஆகும்.