PVTG குழுக்களுக்கான தனி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
September 11 , 2025 45 days 111 0
வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி இனக் குழுக்களை (PVTGs) தனித்தனியாகக் கணக்கிடுமாறு தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரைப் பழங்குடியின விவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
700க்கும் மேற்பட்ட பழங்குடியினச் சமூகங்களில், 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒன்றியப் பிரதேசத்தில் வசிக்கும் 75 சமூகங்கள் ஆனது PVTG குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டாலும், PVTG குழுக்களுக்கான தனித் தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு PVTG குழுக்களின் துல்லியமான கணக்கெடுப்பு அவசியமாகும்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட PM-JANMAN, மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டுவசதி, குடிநீர், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, இணைப்பு, மின்சாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் PVTG குழுக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெரும்பாலும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் வாழ்கின்ற PVTG குழுக்கள் மோசமான சுகாதாரம், குறைந்த கல்வியறிவு மற்றும் அடிப்படைச் சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் உள்ளிட்ட உள்ளார்ந்த சமூக-பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
1960 ஆம் ஆண்டுகளில் தேபர் ஆணையம் ஆனது முதலில் இந்தக் குழுக்களை தேக்கமடைந்த மக்கள் தொகை, குறைந்த கல்வியறிவு மற்றும் விவசாயத்திற்கு முந்தைய பொருளாதாரங்களின் அடிப்படையில் வகைப்படுத்தியதோடு பின்னர் இது 'பழமையான பழங்குடியினக் குழுக்கள்' என்று அழைக்கப்பட்டது.