தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஆனது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்திற்குச் சமமான ஓய்வூதியத்தை உறுதி செய்யும்.
2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இது கொண்டு வரப் பட்டது.
ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% ஓய்வூதிய நிதிக்குப் பங்களிப்பார்கள் என்ற நிலையில் மீதமுள்ள தொகையை அரசு ஏற்கும்.
OPS திட்டத்தின் கீழ், அரசாங்கம் முழு ஓய்வூதிய நிதிப் பங்களிப்பையும் ஏற்றுக் கொண்டது.
TAPS திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும்.
இது 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஓய்வூதிய நிதிக்கான ஒற்றை முறைப் பங்களிப்பு சுமார் 13,000 கோடி ரூபாய் மற்றும் ஒவ்வோர் ஆண்டும் 11,000 கோடி ரூபாய் கூடுதல் பங்களிப்புகள் வழங்கப்படுவதுடன், TAPS திட்டத்தின் கீழ் மாநிலத்தின் மீதான நிதிச் சுமை மிக கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வுக்கு ஏற்ப வருடாந்திர ஓய்வூதியப் பங்களிப்பும் அவ்வப்போது திருத்தப் படும்.
ஓய்வூதியதாரர்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) உயர்வுகளுக்கு தகுதி பெறுவார்கள்.
ஓய்வூதியதாரர் இறந்தால், அவர்கள் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% ஆனது பரிந்துரைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப் படும்.
மேலும், ஓய்வூதியம் பெறும் போது அல்லது பணியில் இருக்கும் போது இறந்தால், பணிக் காலத்தின் நீளத்தின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் வரை பணிக் கொடை வழங்கப் படும்.
ஓய்வூதியத்திற்கான தகுதி வாய்ந்த பணிக் காலத்தை முடிக்காமல் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை TAPS உறுதி செய்கிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, TAPS செயல்படுத்தப் படுவதற்கு முன்பு ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் படி, தமிழ்நாடு அரசு 2,07,054 கோடி ரூபாயை உறுதிப்பாடு வழங்கப்பட்ட செலவினங்களுக்கு செலவிடும் என மதிப்பிடப் பட்டுள்ளது என்பதோடு இது அதன் மதிப்பிடப்பட்ட வருவாய் வரவுகளில் 62% ஆகும்.
இதில் சம்பளம் (வருவாய் வரவுகளில் 28%), ஓய்வூதியங்கள் (14%) மற்றும் வட்டி செலுத்துதல்கள் (21%) ஆகியவை அடங்கும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதற்காக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆனது, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) உடனடியாக ரத்து செய்யாத இரண்டு மாநிலங்கள் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகியவை மட்டுமே ஆகும்.
திரிபுரா OPS திட்டத்தினை ரத்து செய்து 2015 ஆம் ஆண்டில் NPS திட்டத்தினைச் செயல் படுத்தியது.
2005–06 ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் அரசு ஊழியர்களுக்கு NPS திட்டத்தினை ஏற்றுக்கொண்டன.
NPS 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசில் உள்ள NDA அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப் பட்டது.
இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு OPS மீண்டும் செயல் படுத்தப் பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவையும் OPS திட்டத்திற்கு மாற திட்டமிட்டு உள்ளன.