மெக்சிகோ நாட்டின் காபோ சான் லூகாஸ் கடற்கரை அருகே, ரீகலெசிடே குடும்பத்தைச் சேர்ந்ததும், உலகின் மிக நீளமான எலும்பு மீன் வகையுமான இரண்டு ராட்சத துடுப்பு மீன்கள் சமீபத்தில் காணப்பட்டன.
பொதுவாக 900 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த ஆழ்கடல் உயிரினங்கள் அரிதாகவே மேற்பரப்பில் தென்படுகின்றன.
2026 சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது, மகாராஷ்டிராவின் டோம்பிவிலியில் 9,111 பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நேரத்தில் பாரம்பரிய 'லெசிம்' நடனத்தை ஆடி கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
அந்தமான் தீவுகளில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ரெடுவிடே குடும்பத்தைச் சேர்ந்த அரிய வகை குகைவாழ் பூச்சியான 'மயோபேன்ஸ் கெம்பி' மீண்டும் கண்டறியப் பட்டுள்ளது.
அசாமின் மானஸ் தேசியப் பூங்காவின் புல்வெளிகளில் மெலஸ்டோமேட்டேசி குடும்பத்தைச் சேர்ந்த 'ஆஸ்பெக்கியா ஜுபின்காஜியானா' என்ற புதிய தாவர வகை கண்டுபிடிக்கப் பட்டு, அதற்குப் பாடகர் ஜுபீன் கார்க் நினைவாகப் பெயரிடப் பட்டு உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் ஜபர்வான் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான ஸ்ரீநகரின் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது.
அசாமின் கவுஹாத்தியைச் சேர்ந்த 17 வயது சர்வதேச மாஸ்டர் மயங்க் சக்ரவர்த்தி, இந்தியாவின் 94-வது சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆனார்; இதன் மூலம் வடகிழக்கு இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
குஜராத்தின் பாவகத் மலையில் அரிய வகை நீலம் மற்றும் வெள்ளை நிறங்கொண்ட ஈப்பிடிப்பான் (மஸ்சிகாபிடே குடும்பம்) பறவை காணப்பட்டது.