இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, அசாம் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயச் செயல்முறையை சமீபத்தில் தொடங்கியது.
அசாம் மாநிலத்தில் கடைசியாக 1976 ஆம் ஆண்டில் தான் எல்லை நிர்ணயம் மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய எல்லை நிர்ணயமானது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.
எல்லை நிர்ணயம் என்பது மாறிவரும் மக்கள்தொகை எண்ணிக்கையை உள்ளடக்கும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைக்கும் ஒரு செயல்முறையாகும்.
மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப் படுவதை உறுதி செய்வதே எல்லை நிர்ணய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மக்கள் தொகை ஒரே சீரான முறையில் அதிகரிக்காது என்பதால், எல்லை நிர்ணயம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பதிவான மக்கள்தொகைப் பங்கீட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள ஒரு சுயாதீன ஆணையக் குழு ஆகும்.
இது எல்லை நிர்ணய ஆணையச் சட்டத்தின் கீழ் மத்திய அரசினால் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த ஆணையமானது, இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் (ECI) இணைந்து எல்லை நிர்ணய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
அரசியலமைப்பின் 82வது சட்டப் பிரிவானது, இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் ஒரு எல்லை நிர்ணயச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததும், உடனே எல்லை நிர்ணய ஆணையத்தினை மத்திய அரசானது அமைக்க வேண்டும்.
இது நாள் வரையில் (1952, 1963, 1973 மற்றும் 2002) மொத்தம் 4 எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2002 ஆம் ஆண்டு சட்டமானது மக்களவைக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கையில் அல்லது பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான பங்கீடுகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.
இச்சட்டம் அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை எல்லை நிர்ணய நடவடிக்கையில் இருந்து ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை ஒதுக்கி வைத்தது.
இந்திய அரசாங்கமானது, இந்த 4 மாநிலங்களுக்கும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்திற்குமான எல்லை நிர்ணய ஆணையத்தினை 2020 ஆம் ஆண்டில் மறு சீரமைத்தது.
மக்களவையின் மாநில வாரியான கூட்டமைவினை மாற்றிய முந்தைய எல்லை நிர்ணய நடவடிக்கையானது 1976 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
இது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப் பட்டது.
அண்மைக் காலமாக எல்லை நிர்ணய நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப் படுவது இல்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையானது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு எல்லை நிர்ணய நடவடிக்கையானது 2001 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு வரை எல்லை நிர்ணய நடவடிக்கையை மேலும் தாமதப் படுத்தச் செய்வதற்காக மற்றொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.