பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation - DRDO) “அபயாஸ்” என்ற அதிவேக இழக்கத்தக்க வானில் உள்ள இலக்கைத் (HEAT - High-speed Expendable Aerial Target) தாக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்தச் சோதனையானது ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள இடைக்கால சோதனை நிலையத்தில் நடத்தப்பட்டது.
அபயாஸ், தனது கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றிற்காக உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட எம்இஎம்எஸ் (MEMS) என்ற கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்துகின்றது.
இது இலக்கைத் தாக்கும் ஒரு ஆளில்லா குட்டி விமானமாகும்.
இலக்கைத் தாக்கும் இந்தக் குட்டி விமானங்களானது இடைமறிப்பு ஏவுகணையின் வரம்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றது.
அபயாஸ் ஆனது உட்புற வளிமண்டலத்தில் நடைபெறும் வான் பயிற்சிகள் மற்றும் நிலப் பரப்பிலிருந்து வான்நோக்கி சென்று இலக்கை இடைமறிக்கும் பயிற்சிகள் ஆகியவற்றிற்காக விமானத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
உட்புற வளிமண்டல ஏவுகணை என்பது புவியின் வளிமண்டலத்திற்குள் (100 கிலோ மீட்டருக்கும் குறைவான உயரத்தில்) செயல்படும் ஒரு ஏவுகணையாகும்.