இந்தியப் பிரதமர் மோடி தற்சார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்காக ரூ.20 இலட்சம் கோடி மதிப்பிலான ஒரு சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பினை அறிவித்துள்ளார்.
இந்தப் பொருளாதாரத் தொகுப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆக உள்ளது.
இந்தப் புதிய பொருளாதாரத் தொகுப்பானது பொது முடக்கத்தின் காரணமாக மிகவும் பாதிப்படைந்த தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் தொழிற்துறையினருக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்தப் பொருளாதாரத் தொகுப்பானது நிலம், தொழிலாளர், நிதிப் புழக்கம், சட்டம் மற்றும் உள்ளூர்த் தன்மை ஆகிய உற்பத்தி விநியோகச் சங்கிலியின் 5 முக்கியமான நிலைகளின் மீதான விவகாரங்களைக் களைய இருக்கின்றது.
இந்தத் பொருளாதாரத் தொகுப்பானது உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படும் பொருட்களை நுகர்வதை ஊக்கப்படுத்தவும் பயன்பட இருக்கின்றது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மத்திய நிதித்துறை அமைச்சர் 15 பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டமானது உள்நாட்டுப் பொருள்களுக்கான நுகர்வு என்பதின் மீதும் கவனம் செலுத்த இருக்கின்றது.
சிறப்பம்சங்கள்
மத்திய அரசானது முதலீடுகளின் வரம்பை அதிகப்படுத்தியதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளின் (MSME – Micro Small Medium Enterprises) வரையறையை மாற்றியமைத்துள்ளது.
மேலும் இதற்கு முன்பு முதலீடுகள் மட்டுமே MSMEகளை வரையறுக்கப் பயன்படுத்தப் பட்டன.
தற்போது மாற்றியமைக்கப்பட்ட திருத்தத்தின் மூலம் முதலீடுகள் மற்றும் விற்றுமுதல் ஆகிய இரண்டும் MSMEகளை வரையறுக்கப் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
ஒரு நிறுவனம் MSME வகையின் கீழ் வர வேண்டும் என்றால் அந்நிறுவனம் முதலீடு மற்றும் விற்றுமுதல் ஆகிய 2 நிபந்தனையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மேலும், தற்போது புதிய வரையறையின்படி, உற்பத்தி மற்றும் சேவை என்பதை அடிப்படையாகக் கொண்ட MSME நிறுவனங்களுக்கான வகையீடானது நீக்கப் பட்டுள்ளது.
MSME துறைக்காக பிணைத் தொகை அற்ற வகையில் ரூ. 3 இலட்சம் கோடி கடன் தொகையானது (Collateral free) ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்த வசதியானது ரூ. 25 கோடியிலான செலுத்தப்படாத கடன்களைக் கொண்ட நிறுவனங்கள் அல்லது ரூ.100 கோடியை வருடாந்திர விற்று முதலாகக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் சேர்த்து நீட்டிக்கப் பட்டுள்ளது.
அசல் தொகை மீதான கடன் நிறுத்தி வைப்புக் காலமாக 12 மாதங்களுடன் சேர்த்து கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 4 ஆண்டுகளாக உள்ளது.
வட்டித் தொகையானது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும்.
இக்கடன்களுக்கு எந்தவொரு உத்தரவாதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எனினும், 100% கடன் உத்தரவாதப் பிணையானது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டின் மீதும் வழங்கப்படும்.
ரூ. 200 கோடி வரையிலான அரசாங்க ஒப்பந்தங்களுக்கு (அரசு கொள்முதல்) இனிமேல் உலகளாவிய ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மூலாதாரத்திலிருந்து வரிப் பிடித்தம் மற்றும் மூலாதாரத்திலிருந்து வரி வசூல் ஆகிய விகிதங்கள் 25% என்ற அளவில் குறைக்கப்பட உள்ளன.
இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும்.
விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டத்தின் கால வரம்பானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
தற்பொழுது தொழிலாளர் வைப்பு நிதித் திட்டத்தின் கீழ், பங்களிப்பானது 12% தொழிலாளியினாலும் 12% ஆனது முதலாளியினாலும் பங்களிக்கப் படுகின்றது.
அடுத்த 3 மாதங்களுக்கு, தனியார் நிறுவன முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் 10% மட்டுமே செலுத்த வேண்டும்.