ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பு (LOTUS-HR)
October 26 , 2019 2033 days 594 0
ஆரோக்கியமான மறுபயன்பாட்டிற்கான நகர்ப்புற கழிவுநீர் நீரோடைகளின் உள்ளூர் சுத்திகரிப்பு (Local Treatment of Urban Sewage Streams for Healthy Reuse - LOTUS-HR) எனப்படும் இந்தோ-டச்சு திட்டத்தின் இரண்டாம் கட்டமானது புது தில்லியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் மற்றும் டச்சு ராயல் தம்பதிகளான நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரால் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் அழைப்பின் பேரில் டச்சு ராயல் தம்பதிகள் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தப் பயணமானது அரசர் வில்லெம்-அலெக்சாண்டர் 2013 ஆம் ஆண்டில் அரியணை ஏறியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு மேற்கொண்ட அவரது முதலாவது அரசுமுறைப் பயணமாகும்.
இது வடிகால்களில் இருந்து வரும் தூய்மையற்ற நீரைச் சுத்தப்படுத்த முயலும் ஒரு நீர் சுத்திகரிப்பு ஆய்வகமாகும்.
LOTUS-HR இல் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது ஈரநிலத் தொழில்நுட்பம் என்று அழைக்கப் படுகின்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான நெதர்லாந்து அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றன.
மேலும், தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எரிசக்தி & வள நிறுவனம் (The Energy and Resources Institute - TERI) ஆகியவை இந்தத் திட்டத்தின் பங்காளர் அமைப்புகளாக செயல்படுகின்றன.