இந்திய உச்ச நீதிமன்றமானது நிறுவப்பட்டதன் 73வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.
இந்த ஆண்டு நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
1950 ஆம் ஆண்டு, இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாறியதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 28 ஆம் தேதியன்று இந்திய உச்ச நீதிமன்றம் நடைமுறைக்கு வந்தது.
இந்திய நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள இளவரசர்களின் அவையில் தொடக்க விழா நடைபெற்றது.
1950 ஆம் ஆண்டின் அசல் அரசியலமைப்புச் சட்டமானது, ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தினை உருவாக்கி, இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரத்தினை பாராளுமன்றத்திற்கு வழங்கியது.
நாடாளுமன்றமானது 1950 ஆம் ஆண்டில் 8 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 1956 ஆம் ஆண்டில் 11 ஆகவும், 1960 ஆம் ஆண்டில் 14 ஆகவும், 1978 ஆம் ஆண்டில் 18 ஆகவும், 1986 ஆம் ஆண்டில் 26 ஆகவும், 2009 ஆம் ஆண்டில் 31 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 34 ஆகவும் (தற்போதைய எண்ணிக்கை) உயர்த்தியது.