வங்கித் துறையில் வளர்ந்து வரும் அபாயங்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியாவில் வங்கிகளின் போக்குகள் மற்றும் முன்னேற்றம் 2023–24 என்ற அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
மொத்த வாராக் கடன்கள் (GNPA) ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2.7% ஆகவும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2.5% ஆகவும் குறைந்தது.
வங்கிகளில் அதிக லாபம் பதிவாகிய நிலையில், 2023–24 ஆம் நிதியாண்டில் (FY) சொத்துக்களின் மீதான வருமானம் (RoA) 1.4% ஆகவும், பங்குகளின் மீதான வருமானம் (RoE) 14.6% ஆகவும் இருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் (SCBs) உள்ள மொத்த கடனில் 25.3% ஆக இருந்த அடமானமற்ற கடன்களின் பங்கு அதிகரித்து வருவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மேம்பட்ட சொத்து தரம் மற்றும் வளமான மூலதன நிறைவு விகிதம் (CAR) ஆகியவற்றுடன் வலுவான கடன் வளர்ச்சியைக் காட்டின.
டிஜிட்டல் கடன் வழங்குவதில் நெறிமுறை சாரா வடிவங்கள் மற்றும் வங்கிகளில் அதிக ஊழியர் விலகல் ஆகியவற்றிலிருந்து செயல்பாட்டு நிலைத்தன்மையை பாதிக்கும் அபாயங்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.